வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதல்-அமைச்சர் உத்தரவு


வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதல்-அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 28 Sep 2023 12:16 PM GMT (Updated: 28 Sep 2023 2:09 PM GMT)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.

உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story