18 வயது நிரம்பிய 40 ஆயிரம் பேருக்கு நிதி உதவி


18 வயது நிரம்பிய 40 ஆயிரம் பேருக்கு நிதி உதவி
x

மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சரான பிறகு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய 40 ஆயிரம் பேருக்கு நிதி உதவி் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்

கோயம்புத்தூர்

கிணத்துககடவு

மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சரான பிறகு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய 40 ஆயிரம் பேருக்கு நிதி உதவி் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள குழந்தைகள் மையத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திடீரென வந்தார்.

அவரை சிறுமிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

பின்னர் அவர், குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்து சாப்பிட்டு பார்த்தார். குழந்தைகளுக்கும் மதிய உணவு பரிமாறினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பாடு எப்படி உள்ளது என்று மாணவ -மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து சிங்கராம்பாளையம் பிரிவில் உள்ள சரணா லயத்தில் ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார்.

முன்னதாக அமைச்சர் கீதா ஜீவனை கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், பேரூராட்சி தி.மு.க. செயலாளர் கனகராஜ், பேரூ ராட்சி துணைத் தலைவர் பாலகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

2 பெண் குழந்தைகள் திட்டம்

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்ற வழக்குகளில் கைதாகும் இளம் சிறார்களை எவ்வாறு கையாள வேண்டும். அவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்க கூடாது. அவர்களது வழக்கை விரைவில் முடிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு நேயமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதற்கேற்ப கோவை மண்டலத்தில், காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு, ஜூனியர் ஜூடிசியல் போர்டு உறுப்பினர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் ஆகியோருக்கு 3 நாள் பயிற்சி தொடங்கி உள்ளது.

வங்கியில் பணம்

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 2-வது குழந்தைக்கு 3 வயதாகும் போது பதிவு செய்ய வேண்டும். முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு 40 ஆயிரம் பிள்ளைகளுக்கு நிதி பெற்று கொடுத்துள்ளோம். குழந்தைகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

முகவரி மாற்றம், வங்கி கணக்கு வழங்காதது போன்றவற்றால் தாமதம் ஏற்படுகிறது. தவறான முகவரி குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வாயிலாக அறிவுறுத்தி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

18 வயது நிரம்பியவர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டம், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். அதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த கூறி உள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கொடுப்பதாக முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story