தடகளப் போட்டியில் சாதித்த மாணவிக்கு நிதி உதவி
அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் தடகளப் போட்டியில் சாதித்த மாணவிக்கு நிதி உதவி வழங்கினார்.
முதுகுளத்தூர்,
பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த முருகானந்தம் மகள் சர்மிளா (வயது 20). இவர் பரமக்குடி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக 20 வயதுக்குட்பட்டோருக்கான குண்டெறிதல் போட்டியில் கலந்து கொண்டார். இவர் பழைய சாதனை 13.27 மீட்டர் முறியடித்து 14.08 மீட்டர் தூரம் எறிந்து 12 வருட கால சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். இதை தொடர்ந்து வருகிற 9-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இதுகுறித்து சர்மிளா முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் பயணச் செலவுக்காக நிதி வழங்குமாறு சட்டமன்ற அலுவலக உதவியாளர்களிடம் மனு அளித்தார். அதன் பேரில் தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தன் சர்மிளாவுக்கு நிதியுதவி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அவைத் தலைவர் கருணாநிதி, வார்டு செயலாளர் செல்வமணி, கிளைச் செயலாளர்கள் முருகன், பாலசுப்பிரமணியன் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்தியந்திரன், டோனி தாமஸ், ரஞ்சித் மணிகண்டன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.