என்ஜினீயரிடம் ரூ.4.38 லட்சம் மோசடி
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்ஜினீயரிடம் ரூ.4.38 லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
என்ஜினீயர்
காரைக்குடி அருகே பாரிநகரில் வசித்து வருபவர் சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்ரீதர் (வயது 35). இவர் மும்பையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணி செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் திருமண தகவல்மையம் ஒன்றில் பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து செல்போனில் பேசிய பெண் ஒருவர் தான் லண்டனில் டாக்டராக இருப்பதாகவும், உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும், தான் காரைக்குடி வருவதாக சொல்லியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் தான் டெல்லி ஏர்போர்ட்டில் சுங்கத்துறையினர் விசாரணையில் சிக்கி விட்டதாகவும், கையில் பணம் இல்லை எனவும், பணம் அனுப்பினால் அங்கிருந்து காரைக்குடி வருவதாக கூறியுள்ளார்.
ரூ.4.38 லட்சம்
இதை நம்பிய ஸ்ரீதர் அந்த பெண் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பல கட்டமாக ரூ.4.38 லட்சம் செலுத்தியுள்ளார். இதற்கிைடயே மீ்ண்டும் அந்த பெண் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ரீதர் நேரடியாக டெல்லி சென்று பார்த்த போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இது குறித்து அவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் அலைபேசி டவர் மேற்கு வங்கத்தில் காட்டுவது தெரிந்தது. போலீசார் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.