காஞ்சீபுரம் அருகே நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணத்திற்கு 6 நாளே உள்ள நிலையில் பரிதாபம்


காஞ்சீபுரம் அருகே நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணத்திற்கு 6 நாளே உள்ள நிலையில் பரிதாபம்
x

காஞ்சீபுரம் அருகே திருமணத்திற்கு 6 நாட்களே உள்ள நிலையில் தனியார் நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி செண்பகம். இவர்களுக்கு விஜயபாஸ்கர் (வயது 30) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். விஜயபாஸ்கரின் சகோதரிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

விஜயபாஸ்கர் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு வந்தார். இவரை நம்பி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் முதலீடு செய்த பொதுமக்கள் அவ்வப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த விஜயபாஸ்கரின் தாய் செண்பகம் கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் அவருக்கு 16-ம் நாள் காரியம் நடைபெற்றது.

இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் விஜயபாஸ்கர் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமலும், தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளை பணமின்றி செய்யமுடியாமலும், தாய் இறந்து போன துக்கத்திலும் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்த விஜயபாஸ்கர் நேற்று தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த அறிந்த அக்கம்பக்கத்தினர் பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விஜயபாஸ்கரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வகின்றனர்.


Next Story