4-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன மேலாளர் தற்கொலை
சென்னை தியாகராயநகரில் கைகளை கத்தியால் அறுத்துக்கொண்டு 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 49). மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்த இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணி நிமித்தமாக சென்னை வந்தார். தியாகராய நகர் ராமன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி கோவை சென்று குடும்பத்தினரை சந்தித்து விட்டு, நேற்று முன்தினம் காலை முத்துராஜ் சென்னை திரும்பினார். வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.
4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
இந்த நிலையில், நேற்று காலை முத்துராஜ், தனது 2 கைகளையும் கத்தியால் அறுத்துக்கொண்டு, ரத்தம் சொட்டச்சொட்ட 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு பாண்டி பஜார் போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், முத்துராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
அவர், கோவை சென்று குடும்பத்தினரை சந்தித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளதால், குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலை செய்த தனியார் நிதி நிறுவனத்தில் எதுவும் பிரச்சினையால் உயிரை மாய்த்துக்கொண்டாரா? என்ற கோணத்தில் பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.