சட்டவிரோத வர்த்தக நடைமுறைக்காக நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்-நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோத வர்த்தக நடைமுறைக்காக பஜாஜ் நிதி நிறுவனம் இழப்பீடாக ரூ.1 லட்சத்தை அளிக்க வேண்டும் என அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பஜாஜ் நிதி நிறுவனம்
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஜேசுராஜ் சாண்டியாகோ (வயது 52). இவர் வேலைக்கு ஆட்களை அமர்த்தும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னை பஜாஜ் நிதி நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.8 லட்சத்து 52 ஆயிரம் கடன் வாங்கினார். மாதம் ரூ.26 ஆயிரத்து 383 வீதம் 48 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.
இந்தநிலையில் 5 மாத தவணை கட்டியபிறகு கடந்த 2016-ம் ஆண்டு முழு கடனையும் அடைக்கும் வகையில் ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 273-க்கு காசோலை வழங்கினார். அது பணம் இன்றி திரும்பியது. இதையடுத்து அதே தொகையை ஆர்.டி.ஜி.எஸ். மூலம் செலுத்தினார். அதன்பிறகும் தொடர்ந்து 2 மாதங்கள் அவரது வங்கி கணக்கில் மாத தவணை தொகை எடுக்கப்பட்டது.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
இதனைதொடர்ந்து பஜாஜ் நிதி நிறுவனத்தின் அறிக்கையை வாங்கி பார்த்தபோது ஜேசுராஜ் சாண்டியாகோ கட்டிய ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 273 வரவு வைக்கப்படவில்லை. அதன்பின்னர் அவர் மீண்டும் ரூ.7 லட்சத்து 97 ஆயிரத்து 900 செலுத்தியுள்ளார். தவறுதலாக இருமுறை பணம் கட்டியதையறிந்ததும் பஜாஜ் நிதி நிறுவனத்தில் ஜேசுராஜ் சாண்டியாகோ பலமுறை தெரிவித்தும் உரிய பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ரூ.1 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்செல்வி, பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு ஜேசுராஜ் சாண்டியாகோவிற்கு வட்டி தொகை ரூ.52 ஆயிரத்து 748-ஐ 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் பணம் செலுத்தும் தேதி வரை வட்டியுடன் திருப்பி தரப்பட வேண்டும். சட்டவிரோத வர்த்தக நடைமுறைக்கான இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரத்தை ஒரு மாதத்தில் அளிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.