நிதி மேலாண்மையை மேம்படுத்த ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்


நிதி மேலாண்மையை மேம்படுத்த ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்
x

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையை மேம்படுத்த ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என புதிதாக பதவியேற்ற துணைவேந்தர் ரவி கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையை மேம்படுத்த ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என புதிதாக பதவியேற்ற துணைவேந்தர் ரவி கூறினார்.

நிதி மேலாண்மை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக பேராசிரியர் ரவி பதவி ஏற்றார். அதன்பின்னர் அவர் ஆட்சி மன்ற குழு கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனைவரையும் அரவணைத்து அனைத்து செயல்பாடுகளிலும் நேர்மையான வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெறும். தேசிய தர நிர்ணய குழுவின் மதிப்பீட்டின்படி அழகப்பா பல்கலைக்கழகம் அதிக புள்ளிகள் பெற்று இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தேசியதர நிர்ணய குழுவின் அடுத்த சுற்றுக்கான வருகை விரைவில் வர உள்ளது. அதிலும் அதிக புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகத்தின் மதிப்பை மேம்படுத்த ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் ஒத்துழைப்போடு முயற்சி மேற்கொண்டு வெற்றி பெறுவோம். அதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு உயரிய அங்கீகாரம் பெறுவோம்.

மாணவர்கள் பயிலும் கல்வியோடு தொடர்புடைய வகையில், தனித்திறனை வளர்த்து கொள்ளும் பொருட்டு, திறன் மேம்பாட்டு மையம் சிறப்பாக செயல்பட அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும். பல்கலைக்கழகத்தின் நிதி மேலாண்மையை மேம்படுத்தும் பொருட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். அதன் மூலம் அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் நமது பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

ரூ.100 கோடி ஒதுக்கீடு

இணைவு கல்வி திட்டம், தொலைநிலைக்கல்வி திட்டம் ஆகியவை மேம்படுத்தப்படும். பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டமளிப்பு விழா விரைவில் நடத்தப்படும். பல்கலைக்கழக பயன்பாட்டிற்காக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு பயன்படுத்துவோம். மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் உள்ள ரூசா திட்டத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூ.42 கோடி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்பின் திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி திட்டப்பணிகளை மேற்கொண்டு செலவு செய்து அது குறித்த அறிக்கை சமர்ப்பித்து பிறகு அதற்கான நிதியினை பெற்றுக்கொள்ளலாம் என மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி ரூ.11 கோடி அளவில் பெறப்பட்டுள்ளது. இன்னும் ரூ 47 கோடி நிதியினை பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புதிய பாடத்திட்டங்கள்

தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய படிப்புகள் தொடங்கப்படும். இப்பகுதியின் உற்பத்தி பொருட்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும், அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கவும் பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உதவிகள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது பதிவாளர் ராஜா மோகன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், கருப்புசாமி, சங்கரநாராயணன், குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story