"காணாமல் போன 13 ஊருணிகளை கண்டுபிடித்து தாருங்கள்"- நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


காணாமல் போன 13 ஊருணிகளை கண்டுபிடித்து தாருங்கள்- நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 May 2022 6:37 PM GMT (Updated: 31 May 2022 7:12 PM GMT)

"காணாமல் போன 13 ஊருணிகளை கண்டுபிடித்து தாருங்கள்" என பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி

"காணாமல் போன 13 ஊருணிகளை கண்டுபிடித்து தாருங்கள்" என பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகர்மன்ற கூட்டம்

பரமக்குடி நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:

கவுன்சிலர் தேவ கிட்டு: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அப்ரூவல் இல்லாமல் இடங்களை பிளாட் போட்டு விற்பனை செய்கின்றனர். நாளடைவில் அது பிரச்சினையானால் அதற்கு யார் பொறுப்பு? நகராட்சி நிர்வாகத்தை தான் அவதூறாக பேசுவார்கள்.தலைவர் சேது கருணாநிதி: அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊருணிகள்

கவுன்சிலர் அப்துல்மாலிக்: நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை அல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் திருட்டு நடக்கிறது.

தலைவர் சேது கருணாநிதி: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் பாக்கியம்: நீதிமன்ற உத்தரவின்படி பரமக்குடியில் ஒரே ஒருநாள் மட்டும் பெயரளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதோடு நின்றுவிட்டது. பரமக்குடி நகரில் 13 ஊருணிகள் இருந்தன. தற்போது ஒரு ஊருணியை கூட கண்ணில் காணவில்லை. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு 13 ஊருணிகளையும் கண்டுபிடித்து தரவேண்டும் என்றார்.

வலியுறுத்தல்

அதற்கு பதில் அளித்த ஆணையாளர் திருமால் செல்வம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார். ஆனாலும் கவுன்சிலர் பாக்கியம் நடிகர் வடிவேலு பாணியில் 13 ஊரணி களையும் கண்டுபிடித்து தாருங்கள் என நகைச்சுவையாக பேசினார். அதைத்தொடர்ந்து நகரமன்ற கூட்டம் அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.

வடமலையான்: பஸ் நிலையத்தில் உள்ள பூக்கடைகள் உள்பட அனைத்து கடைகளுக்கும் நகராட்சி சார்பில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான வரியையும் அவர்கள் செலுத்துகின்றனர். ஆனால் வெளி இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்து நடத்துகின்றனர். அவர்களுக்கு எந்த வாடகையும் இல்லை. அவர்கள் மீது நகராட்சி என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது?. பரமக்குடியில் காணாமல் போன 13 ஊருணிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் சேது கருணாநிதி: நடைபாதை, பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றார். தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் வலியுறுத்திப் பேசினர். நகராட்சி பொறியாளர் அய்யனார் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story