பலமடங்கு அபராதம் உயர்வு: போக்குவரத்து விதிமீறலுக்கு முடிவு கட்டப்படுமா? -நாமக்கல் மக்கள் கருத்து
நாமக்கல்:
பலமடங்கு அபராதம் உயர்த்தப்பட்டது போக்குவரத்து விதிமீறலுக்கு முடிவு கட்டப்படுமா? என்பது குறித்து நாமக்கல் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெருகும் வாகனங்கள்... அதிகரிக்கும் விபத்துகள்
நாட்டில் பெருகி வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி செல்வது விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைகிறது.
சாலை விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோய் வருகிறது. உடல் உறுப்புகளை இழந்து பலர் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
அபராதம் உயர்வு
அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
தற்போது மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்றால் ரூ.1,000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை
மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை நாமக்கல்லில் வருகிற 28-ந்தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது புதிய அபராத தொகையை 'இ-சலான்' கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் போக்குவரத்து விதிமீறல்கள் குறையுமா? என்பது பற்றிய நாமக்கல் மாவட்ட மக்கள் பார்வை வருமாறு:-
கூடுதல் சுமை
நாமக்கல்லை சேர்ந்த வக்கீல் ருத்ராதேவி:
கொரோனா தாக்கம் முடிந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறார்கள். இந்த வேளையில் தீபாவளி பண்டிகை நேரத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை அமல்படுத்தி அபராதத்தை அதிகப்படுத்துவது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக தான் இருக்கும்.
குறிப்பாக இதனால் ஏழை தொழிலாளர்களும், தினக்கூலிகளும் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வாகன விபத்துக்கு முதல் காரணம் மதுக்கடைகள் தான். சமுதாய நலனுக்காக மதுக்கடைகளை குறைக்க அரசு முன்வர வேண்டும். சாலை விதிமுறை மீறலுக்கு அபராத தொகை பலமடங்கு உயர்த்தி இருப்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரே அமல்படுத்த வேண்டும்.