அரசு சித்த மருத்துவ கல்லூரியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் ஓலைச்சுவடிகள்
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
ஓலை சுவடிகள்
தமிழ் சித்த மருத்துவம் உலக புகழ் பெற்றது ஆகும். அகத்தியர், திருமூலர் போன்ற சித்தர்கள் அருளிய மருத்துவ குறிப்புகள் பல நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது. நவீன மருத்துவ சிகிச்சைக்கு மேலாக ஒருசில நோய்களை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக டெங்கு, சிக்குன் குனியா, கொரோனா போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் சித்த மருந்துகளின் பங்களிப்பு மிக முக்கியமாக திகழ்ந்தது.
சித்த மருந்துகளில் இத்தகைய சிறப்புகள் இருந்தாலும், பல மருத்துவ குறிப்புகள் நமக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது முன்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து வெளிப்படாமல் இருக்கிறது. பெரும்பாலானவை போகி போன்ற நாட்களில் தீயில் இட்டு கொளுத்தி விட்டதாலும், பலரது வீடுகளில் பழைய ஓலைச் சுவடிகள் கிடக்கின்றன.
புதிய முயற்சி
எனவே அந்த ஓலைச்சுவடிகளில் இருந்து சித்த மருத்துவ குறிப்புகளை சேகரிக்க நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியும், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்ந்த சுவடிகள் பாதுகாப்பு குழுமமும் இணைந்து புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதாவது இந்த ஓலைச்சுவடிகளை சேகரித்து, அதனை கெட்டுப்போகாமல் மேம்படுத்துவதோடு, அதில் உள்ள எழுத்துக்களை படம் பிடித்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துகிறார்கள். சித்த மருத்துவ குறிப்பு இல்லாத ஓலைச்சுவடிகளும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுகிறது.
இதற்காக அரசு சித்த மருத்துவ கல்லூரியில் தனி அரங்கம் ஏற்படுத்தப்பட்டு பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பேராசிரியர் டாக்டர் சுபாஷ் சந்திரன் தலைமையில், தொல்லியல் துறை சுவடி பாதுகாப்பாளர் கணேசன், உதவியாளர் சந்திர மவுலீஸ்வரன் மற்றும் மாணவ-மாணவிகள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 100 முதல் 200 ஆண்டுகள் வரை பழமையான 400-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை பொது மக்கள் வழங்கி உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓலைச் சுவடிகளை சேகரித்து டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அழைப்பு
இதுகுறித்து பேராசிரியர் சுபாஷ் சந்திரன் கூறியதாவது:-
ஓலைச்சுவடிகளில் பல வகைகள் உள்ளன. ஜோதிடம், மாந்திரீகம், கிராம தேவதை கதைகள், சுடலை, இசக்கி வரலாறு, ராமாயணம், மகாபாரதம், தமிழ் இலக்கியம், தமிழ் எழுத்துகள், ராஜாக்கள் விஜயம், மாடு, யானை வைத்தியம், கணித குறிப்பு என பல வகையான விவரங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். மேலும் பெரும்பாலான ஓலைச்சுவடிகள் சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கியவையாக உள்ளது. இதில் காய்ச்சல் குறித்து தனி சுவடியே உள்ளது. 27 நட்சத்திரங்களில், எந்தெந்த நட்சத்திரங்களில் காய்ச்சல் வந்தால் எந்த மருந்து, எத்தனை நாட்கள் காய்ச்சல் இருக்கும் போன்ற விவரங்கள் அதில் உள்ளது.
எனவே பழமையான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருப்பவர்கள் அதனை சித்த மருத்துவ கல்லூரியில் கொண்டு வந்து தரலாம். அதனை ஆவணப்படுத்தி ஓலைச்சுவடிகள், பூஞ்சை செல்லரித்து போகாமல் இருக்க நவீன தைலம் தடவி மேம்படுத்தி, மீண்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி வழங்கப்படும். இதுதவிர அவர்களது ஓலைச்சுவடியில் உள்ள விவரம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அதை சி.டி.யில் பதிவு செய்து வழங்குவோம். இந்த பணி இலவசமாக செய்து தரப்படும்.
இதுதொடர்பாக ஓலைச்சுவடி வைத்திருப்போர் 94433 58271 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.