வறண்ட வானிலை நிலவி வருவதால் புற்கள் காய்ந்து தீப்பிடிக்கும் நிலை


வறண்ட வானிலை நிலவி வருவதால் புற்கள் காய்ந்து தீப்பிடிக்கும் நிலை
x

குடிமங்கலம் பகுதியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால் புற்கள் காய்ந்து தீப்பிடிக்கும் நிலை உள்ளது.

திருப்பூர்

குடிமங்கலம் பகுதியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால் புற்கள் காய்ந்து தீப்பிடிக்கும் நிலை உள்ளது.

தீவனப் பற்றாக்குறை

குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு பல விவசாயிகள் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்யாமல் நிலங்களை தரிசாக விட்டுள்ளனர். இதனால் விளைநிலங்களில் கிடைக்கும் விவசாயக் கழிவுகள் கால்நடைகளுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி மேய்ச்சல் நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள புற்களும் காய்ந்து கிடக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பசுந் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலர் தீவனங்கள் மற்றும் கலப்புத்தீவனங்களை நம்பியே கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம் கால்நடை வளர்ப்போருக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது.

தீ விபத்து அபாயம்

அதேநேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையோர புற்கள் காய்ந்து கிடப்பதால் வாகனங்களிலிருந்து வெளிவரும் தீப்பொறிகளால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் காற்றின் வேகம் அதிக அளவில் உள்ளதால் புற்களில் பிடிக்கும் தீ அருகிலுள்ள மரங்கள், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.

அத்துடன் சாலையோரங்களில் வீசப்படும் குப்பைகளில் உள்ள பாலிதீன் கழிவுகளை ஒருசிலர் தீ வைத்து கொளுத்துகின்றனர். அதுபோன்ற சமயங்களில் காய்ந்த புற்கள் மூலம் தீ பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.

மேலும் புதர் போல பரவியுள்ள காய்ந்த புற்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பதுங்கியிருந்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே சாலையோர புற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Tags :
Next Story