குப்பை கிடங்கில் பற்றிய தீயால் பரபரப்பு


குப்பை கிடங்கில் பற்றிய தீயால் பரபரப்பு
x

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குப்பை கிடங்கில் பற்றிய தீயை பலத்த காற்று காரணமாக அணைக்க முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குப்பை கிடங்கில் பற்றிய தீயை பலத்த காற்று காரணமாக அணைக்க முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது.

தரம் பிரிப்பு

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று தீப்பிடித்தது. நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிலைய அலுவலர்கள் ராஜேந்திரன், ஜமால் அப்துல் நாசர் ஆகியோர் தலைமையில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பலத்த காற்று

ஆடி மாதம் பிறக்க உள்ளதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்று காரணமாக குப்பை கிடங்கில் பற்றிய தீ அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. குப்பை கிடங்கு முழுவதும் தீப்பற்றிய நிலையில் கடும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

இந்த புகையால் அந்த குப்பை கிடங்கை சுற்றி உள்ள குடியிருப்புகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சொல்ல முடியாத அவதி அடைந்தனர். அதிகாலையில் தொடங்கிய தீ அணைக்கும் பணி மாலை வரை நீடித்தது. பலமணி நேரம் போராடியும் கடும் காற்று காரணமாக தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

புகை மண்டலம்

சம்பவம் பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் தீயை துரிதமாக அணைப்பதற்கு தேவையான உதவிகளை செய்தார்.

இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைக்க முயன்றனர். இந்த பயங்கர தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.


Related Tags :
Next Story