கபிலர்மலை அருகேகுடிசையில் தீ விபத்துரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
பரமத்திவேலூர்:
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (40). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென குடிசையில் தீப்பிடித்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் குடிசையில் எரிந்த தீ மளமளவென வேகமாக பரவி எரிந்தது. இதையடுத்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குடிசையில் எரிந்த தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் குடிசையில் இருந்த துணி, உணவு பொருட்கள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், ஆவணங்கள் உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.