கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ

கம்பத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
கம்பம் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனைக்கு இணையான அனைத்து மருத்துவ சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அதில் தொற்றா நோய் சிகிச்சை பிரிவு அருகே உள்ள காலியிடத்தில் குப்பைகள் போடப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று அந்த குப்பைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்த தொற்றா நோய் சிகிச்சை பிரிவு, ஆண்கள் சிகிச்சை வார்டு உள்ளிட்ட பகுதிகளை கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த வார்டுகளில் இருந்த நோயாளிகள் அச்சத்துடன் வார்டுகளை விட்டு வெளியேறினர்.
உடனே இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள், கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், குப்பைகளில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.