டிராக்டர் டிப்பர் தீயில் எரிந்து நாசம்

வைக்கோல் ஏற்றி சென்றபோது மின் கம்பி மீது உரசியதில் டிராக்டர் டிப்பர் தீயில் எரிந்து நாசமானது.
வைக்கோல் ஏற்றி சென்றபோது மின் கம்பி மீது உரசியதில் டிராக்டர் டிப்பர் தீயில் எரிந்து நாசமானது.
அறுவடை
தஞ்சை அருகே உள்ள ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அறுவடை பணிக்காக திருவண்ணாமலை, விருத்தாச்சலம், பெரம்பலூர், சேலம், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அறுவடை எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம், 8.கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இரவிலும் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது.
அதேபோல் அறுவடை முடிந்த வயல்களில் எந்திரம் மூலம் வைக்கோலை சேகரித்து கட்டி, விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதை உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர்.
வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர்
இந்த நிலையில் தஞ்சை அருகே உள்ள வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் டிப்பரில் கோபி (வயது54) என்ற டிரைவர் பூதலூர் சாலை பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு வண்ணாரப்பேட்டைக்கு 8-ம் நம்பர் கரம்பை வழியாக சென்று கொண்டிருந்தார்.
சிவகாமிபுரம் சாலை பகுதியில் சென்றபோது உயரே சென்ற மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசி, தீப்பிடித்தது. இதனையடுத்து டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் கீழே இறங்கிவிட்டார். டிப்பரில் இருந்த வைக்கோல் கட்டுகள் எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து தீயை அணைத்தனர். இதில் வைக்கோல், டிப்பருடன் எரிந்து நாசமானது. இதுகுறித்து வல்லம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






