பரமத்திவேலூரில் மரம் அறுவை மில்லில் தீ விபத்து-ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் மரம் அறுவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
மரம் அறுவை மில்
பரமத்திவேலூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 50). இவர் பரமத்திவேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் மில்லை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் மில்லில் இருந்து கரும்புகை எழுந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சாமிநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, மில்லில் தீப்பிடித்து எரிந்தது.
எந்திரம் சேதம்
இதையடுத்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆலையில் இருந்த மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் தீயில் எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.