ஜேடர்பாளையம் அருகே தொடரும் சம்பவம்; தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பவர் டில்லர் எந்திரம் தீ வைத்து எரிப்பு-போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த பவர் டில்லர் எந்திரம் தீ வைத்து எரிக்கப்பட்டது. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
விவசாயி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரைப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. அதில் மா, தென்னை, நெல்லி, எலுமிச்சை மற்றும் கரும்பு ஆகியவற்றை வளர்த்து வருகிறார்.
இவற்றுக்கு தண்ணீர் பாய்ச்ச அங்கு குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள நிலத்தை உழ பயன்படும் சிறிய வகை எந்திரமான பவர் டில்லரையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தார்.
தீ வைத்து எரிப்பு
நேற்று காலை குழந்தைவேல் வழக்கம் போல் விவசாய பணிகளை மேற்கொள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு பவர் டில்லர் எந்திரம் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சேதமாகி கிடந்தது. மேலும் குடிநீர் குழாய்களும், வால்வுகளும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் என கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் பவர் டில்லரை தீ வைத்து எரித்ததும், குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியதும் தெரியவந்தது.
மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொடரும் சம்பவங்கள்
ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த மாதம் ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ வைக்கப்பட்டது. இதில் அங்கிருந்த 9 குடிசைகள் சாம்பலாகின. இதேபோல் வக்கீல் துரைசாமி என்பவரது வெல்ல ஆலை கொட்டகை, 3 டிராக்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த வாரம் கரைப்பாளையம் பகுதியில் பூங்கோதை மற்றும் குழந்தைவேல் ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
பொதுமக்கள் பீதி
இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சிலர் போலீசாரல் கைது செய்யப்பட்ட நிலையிலும், தீ வைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.