காளப்பநாயக்கன்பட்டியில் மஞ்சள் குடோனில் தீ விபத்து; ரூ.2 லட்சம் மஞ்சள் எரிந்து சேதம்
சேந்தமங்கலம்:
காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 150 மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது.
மஞ்சள் குடோன்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள வியாழக்கிழமை வாரச்சந்தை பகுதியை சேர்ந்தவர் மயில் (வயது 68). இவருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் உயர் ரக மஞ்சள் மற்றும் அதற்கு அடுத்தபடியான 2-வது ரகம் ஆகியவற்றை 2 அறைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இதில் 2-வது ரக மஞ்சள் குடோனில் சுமார் 700 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த 150 மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று தெரியவருகிறது.
விசாரணை
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டம் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.