ஈரோடு திருநகர் காலனி மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து; ஏ.சி. எந்திரம் கருகியது


ஈரோடு திருநகர் காலனி மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து; ஏ.சி. எந்திரம் கருகியது
x

ஈரோடு திருநகர்காலனி மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஏ.சி. எந்திரத்தில் தீப்பிடித்தது,

ஈரோடு

ஈரோடு

ஈரோடு திருநகர்காலனி மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஏ.சி. எந்திரத்தில் தீப்பிடித்தது,

மாநகராட்சி பள்ளி

ஈரோடு திருநகர்காலனியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி நடந்து வந்தது.

காலை 9 மணி அளவில், பயிற்சி முகாம் நடைபெற இருந்த ஸ்மார்ட் வகுப்பறைக்கு சென்ற ஆசிரியை ஏ.சி.எந்திரத்தை இயக்கினார். அவர் 'சுவிட்ச் ஆன்' செய்த அடுத்த வினாடி ஏ.சி.எந்திரத்தில் இருந்து 'குபு குபு' என புகை வெளிவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியை விரைந்து சென்று தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தார். இதற்கிடையே தீ மளமளவென பரவத்தொடங்கியது.

ஆசிரிய-ஆசிரியைகள் வேகமாக செயல்பட்டு வேறு வேறு வகுப்பறைகளில் இருந்த குழந்தைகளை விரைவாக வெளியே அழைத்து வந்து அவர்களை பத்திரப்படுத்தினர். அதேநேரம் பள்ளிக்கூடத்துக்கு வரும் அனைத்து மின் இணைப்புகளையும் துண்டித்தனர். இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மின்கசிவு

ஏ.சி.எந்திரம் எரிந்ததால் ஸ்மார்ட் வகுப்பில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனால் அக்கம்பக்கத்து பொதுமக்களும் பள்ளி வளாகத்தில் வந்து கூடினார்கள். பள்ளி வளாகத்துக்குள் மாணவ-மாணவிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதுபற்றி பள்ளிக்கூட தலைமை ஆசிரியை அருணாதேவி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீ பரவாமல் தடுத்தனர். ஸ்மார்ட் வகுப்பறையில் இருந்த புரஜெக்டர், ஸ்மார்ட் திரை ஆகியவற்றையும் பத்திரப்படுத்தினார்கள். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ஈரோடு மாநகராட்சி 1-ம் மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி, செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர் குமரேசன், வட்டார கல்வி அதிகாரி மேகலாதேவி, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் மயில்சாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

விபத்து தவிர்ப்பு

கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். இதுபோல் மின்சார வாரிய பணியாளர்களும் உடனடியாக வந்து அந்த பகுதிக்கு மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் பள்ளிக்கூட மின் இணைப்புகள் சரி செய்யப்பட்ட பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டு உடனடியாக மாணவ-மாணவிகளை வகுப்புகளில் இருந்து வெளியேற்றியதால் பெரும் விபத்தும் இழப்பும் தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுபோல் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா தொலைபேசியில் தலைமை ஆசிரியையிடம் பேசி நிலவரத்தை கேட்டு அறிந்தார். நேற்று பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

விபத்து ஏற்பட்ட ஸ்மார்ட் வகுப்பு ஏ.சி. எந்திரம் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி மூலம் நிறுவப்பட்டு உள்ளது. இதுபோல் மாநகராட்சி பகுதியில் பொருத்தப்பட்ட அனைத்து ஸ்மார்ட் வகுப்பு மின் இணைப்புகளையும் மீண்டும் சரிபார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story