சத்தியமங்கலத்தில் மளிகை கடையில் பயங்கர தீ; ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

சத்தியமங்கலத்தில் மளிகை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் மளிகை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கடையில் இருந்து புகை
சத்தியமங்கலம் தேள்கரடு வீதியை சேர்ந்தவர் முகமது பாரூக். இவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் எஸ்.ஆர்.டி.சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் முகமது பாரூக் வியாபாரத்தை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்று தூங்கிக்ெகாண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் முகமது பாரூக்கின் மளிகை கடையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த மளிகை கடை எதிரே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் முகமது பாரூக்கிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
தீப்பிடித்து எரிந்தது
அதைத்தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவர் எழுந்து உடனே கடைக்கு ெசன்று பார்த்தார். அப்போது கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் மின்இணைப்பை துண்டித்தார்கள். அதன்பின்னர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் திருவிழாவுக்காக பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அங்கிருந்து காலதாமதமாக வந்தது.
அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் கடையின் இரும்பு ஷட்டர்களை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் கடையில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த அரிசி, எண்ணெய் வகைகள், பிஸ்கட் வகைகள் மற்றும் பருப்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மின்சார கசிவு
மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார், தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி, ஆணையாளர் (பொறுப்பு) ரவி, சுகாதார அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டு சென்றார்கள். பின்னர் பாதிக்கப்பட்ட வியாபாரியை சந்தித்து, தேவையான உதவி செய்வதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார்.






