அன்னவாசல் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.
குப்பை கிடங்கில் தீ
அன்னவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் உள்ள குப்பைக்கிடங்கில் மலை போன்று குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் குப்பைக்கிடங்கில் இருந்து நேற்று மாலை திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
புகை மண்டலம்
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
மேலும் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.