குப்பைக்கிடங்கில் தீ விபத்து


குப்பைக்கிடங்கில் தீ விபத்து
x

நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் புகைமண்டலம் பரவியதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் புகைமண்டலம் பரவியதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

மாநகராட்சி குப்பைக்கிடங்கு

நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட குப்பைகள் இங்கு மலைபோல் குவிந்து கிடக்கிறது. தற்போது மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் என பிரித்து வாங்கப்படுவதால் மட்கும் குப்பைகள் மாநகராட்சியின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண்உரம் செயலாக்கல் மையத்தில் உரமாக்கப்படுகின்றன. மட்காத குப்பைகள் மட்டும் வலம்புரிவிளை குப்பைக் கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் இங்குள்ள மட்காத குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக்குகள் அரைக்கப்பட்டு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைக்கிடங்கில் இருந்து அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது.

தீவிபத்து

இந்த நிலையில் நேற்று காலை 6.15 மணி அளவில் திடீரென குப்பைக்கிடங்கின் ஒரு பகுதியில் இருந்து தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த தீ மள, மளவென பற்றி காட்டுத்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது. எரியும்போது அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி தீயணைப்பு அதிகாரி இம்மானுவேல் ஆகியோர் மேற்பார்வையில் நாகர்கோவில் தீயணைப்பு அதிகாரி முகமது சலீம் தலைமையில் நாகர்கோவில், கன்னியாகுமரி, திங்கள்நகர் ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை தடுத்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. பின்னர் நெல்லையில் இருந்து சிறப்பு தீயணைப்பு பம்பு வரவழைக்கப்பட்டு தீயை தடுத்து அணைக்கும் பணி நடந்தது.

கட்டுக்குள் வந்தது

ஆனாலும் குப்பை கிடங்கின் ஒரு பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினாலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அதாவது கொடைக்கானல், நீலகிரி மாவட்டங்களில் பனிக்காலங்களில் பனிமூட்டம் ஏற்படும்போது எவ்வாறு வெண்படலம் சூழ்ந்து நிற்குமோ அதேபோல் புகைமண்டலம் அந்தப் பகுதி முழுவதும் சுற்றி நின்றது.

இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீ அணைக்கும் பணியை வேகப்படுத்தினர். மாலையில் குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீ ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. தீ விபத்து ஏற்படும் போது புகையால் நாங்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தான் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டிருப்பது பொது மக்களை தவிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த தீ விபத்தால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story