டீக்கடையில் சிலிண்டர் மாற்றிய போது தீ விபத்து
நாமக்கல் அருகே டீக்கடையில் சிலிண்டர் மாற்றிய போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோகனூர்
தீ விபத்து
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் சப்பாணி (வயது 56). இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலையில் சப்பாணி வழக்கம்போல் டீக்கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் காலை 6 மணியளவில் டீக்கடையில் இருந்த வணிக சிலிண்டரில் கியாஸ் தீர்ந்து விட்டது. இதையடுத்து கடைக்கு டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (53) என்பவர் உதவியுடன், வீட்டு கியாஸ் சிலிண்டரில் இருந்து, வணிக சிலிண்டருக்கு கியாஸ் மாற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கியாஸ் கசிந்து திடீரென தீப்பிடித்தது. இதில் சப்பாணி மற்றும் கணேசன் ஆகியோர் மீது தீப்பிடித்து உடலில் பரவியது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
2 பேர் படுகாயம்
இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த சப்பாணி, கணேசன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீக்கடையில் சிலிண்டர் மாற்றிய போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.