வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து
வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய தொடங்கியது
போத்தனூர்
கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக குப்பைகளை தனித்தனி குவியல்களாக கொட்டி, தரம் பிரிக்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனாலும் தீ மளமளவென பரவியதால், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.