பட்டாசு கடையில் தீ விபத்து-தொழிலாளி படுகாயம்


பட்டாசு கடையில் தீ விபத்து-தொழிலாளி படுகாயம்
x

கபிஸ்தலம் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சோழங்கர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது வீட்டின் பின்புறம் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்த கடையில் அவர்களது உறவினரான ரவி(45) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் இந்த பட்டாசு கடையின் அருகே வெடி தயாரித்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ பட்டாசு கடைக்கும் பரவி தீப்பற்றி எரிந்தது. இதில், ரவிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டதும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

கடையின் உரிமையாளர் கைது

படுகாயம் அடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, மண்டல துணை தாசில்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் சம்பவத்தை இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பட்டாசு கடை நடத்திய அதன் உரிமையாளர் பிரபாகரனை கைது செய்தனர்.


Next Story