அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ :திருக்கோவிலூர் அருகே பரபரப்பு


அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ :திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மனம்பூண்டி புது நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சீனிவாசன் (வயது 59). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம் தலைமை அலுவலகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணியின் காரணமாக தனது வீட்டை பூட்டிவிட்டு காரைக்காலுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 6.30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியானது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீடு பூட்டி இருக்கும்போது வீட்டின் உள்ளே இருந்து புகை வருகிறது, ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டிருக்குமா? என்கிற அச்சத்தில் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

'பிரிட்ஜ்' வெடித்தது

அதன்பேரில், நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து பூட்டிய வீட்டை திறந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வீடு முழுவதும் தீப்பற்றி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் தீயை அணைப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இருந்தபோதிலும், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன்பின்னர் தான் அங்கிருந்த 'பிரிட்ஜ்' வெடித்து தீப்பற்றி இருப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story