சரவெடி விற்ற பட்டாசு கடைக்கு சீல்
சரவெடி விற்ற பட்டாசு கடைக்கு சீல்
சிவகாசி
சுற்றுச்சூழல் மாசு அடைவதை காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் சரவெடிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதித்தது. இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் சரவெடி பட்டாசுகள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்து விற்பனை ஆகாமல் இருந்த சரவெடிகள் கடந்த ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையில் சரவெடி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக இணையதளங்களில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் மீனம்பட்டி பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜ் என்பவர் தனது கடையில் தடைசெய்யப்பட்ட சரவெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடைக்கு போலீசார் சீல் வைத்தனர். நாகராஜ் (வயது 46), அவரது மனைவி அழகு லட்சுமி (38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் பட்டாசு கடைக்கு சீல் வைத்தனர். தடை செய்யப்பட்ட சரவெடிகள் விற்பனைக்கு வைத்திருந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.