ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை


ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 6 May 2023 3:00 AM IST (Updated: 6 May 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமை தாங்கினார். அவசர காலங்களில் நோயாளிகளை பாதுகாப்பது, தீப்பிடித்தால் தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி எப்படி அணைப்பது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் நடக்க முடியாத நோயாளிகளை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு வெளியே வருவது எப்படி என்பது குறித்தும் தீயணைப்பு துறையினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:-

ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் தீ விபத்துக்களில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீப்பிடித்தால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தீயணைப்பு துறை வாகனம் வரும் வரை காத்திருக்க கூடாது. தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பாக வார்டில் உள்ள நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். மேலும் புகை மூட்டமாக இருந்தால் ஜன்னல், கதவுகளை திறந்து விட வேண்டும். இல்லையெனில் மூச்சுத்திணறல் ஏற்பட கூடும். மேலும் தீப்பிடித்த உடன் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். மேலும் பதற்றம் அடையாமல் நோயாளிகளை பாதுகாப்பதிலும், தீயை அணைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story