விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்புநெல் மூட்டைகளுடன் சென்ற லாரியில் தீ


விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்புநெல் மூட்டைகளுடன் சென்ற லாரியில் தீ
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நெல் மூட்டைகளுடன் சென்ற லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,


விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நல்லூருக்கு நேற்று முன்தினம் இரவு 350 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி புறப்பட்டது.

அந்த லாரியை ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த டிரைவர் நரசிம்மலு என்பவர் ஓட்டிச் சென்றார். நள்ளிரவு 1.45 மணிக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு அந்த லாரி வந்தது. அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக டிரைவர், சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார்.

தீப்பிடித்து எரிந்தது

இந்த நிலையில், லாரியின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென தீ ப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி என்ஜின் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதற்கிடையே இது பற்றி அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியின் என்ஜின் பகுதி மட்டும் தீயில் எரிந்து சேதமானது. மேலும் லாரியின் பின்பகுதியில் தீப்பற்றி விடாமல் தீயணைப்பு வீரர்கள் பார்த்துக்கொண்டதால், நெல்மூட்டைகள் தப்பியது. தீ விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நள்ளிரவில் லாரி தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story