திருச்சி ராணுவ கேன்டீனில் தீ; பல பொருட்கள் எரிந்து நாசம்


திருச்சி ராணுவ கேன்டீனில் தீ; பல பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 18 Sep 2022 6:45 PM GMT (Updated: 18 Sep 2022 7:22 PM GMT)

திருச்சி ராணுவ கேன்டீனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல பொருட்கள் எரிந்து நாசமானது.

திருச்சி


திருச்சி ராணுவ கேன்டீனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல பொருட்கள் எரிந்து நாசமானது.

கேன்டீன்

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே மேஜர்சரவணன் சாலையில் ராணுவ கேன்டீன் (பல்பொருள் அங்காடி) உள்ளது. இங்கு மதுபானங்கள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும்.

மாதந்தோறும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தங்களுக்கு தேவையான பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து வாங்கி செல்வார்கள். இந்தநிலையில் நேற்று மாலை இந்த கேன்டீனில் ஒரு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென வேகமாக பரவி பொருட்கள் எரிய தொடங்கின. இதை கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகவிஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அருகே புத்தக திருவிழா மைதானத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதற்குள் கேன்டீனில் இருந்த பல பொருட்கள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story