ஒர்க் ஷாப்பில் தீ விபத்து
கோத்தகிரியில் உள்ள ஒர்க் ஷாப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பொருட்கள் எரிந்து சேதமானது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் உள்ள ஒர்க் ஷாப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பொருட்கள் எரிந்து சேதமானது.
தீ விபத்து
கோத்தகிரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதிகாலை 2 மணியளவில் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் சென்ற போது, அங்குள்ள ஒர்க் ஷாப் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீ பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்து உடனடியாக கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நிலைய அலுவலர் கருப்பசாமி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் மாதன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
குன்னூர்
ஆனால் ஒர்க் ஷாப்புக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்ட ஒர்க் ஷாப் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோடை காலம் தொடங்கி உள்ளது. தற்போது வெயில் வாட்டி வருவதுடன், கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாய்ஸ் கம்பெனியில் இருந்து அவாஹில் ராணுவ முகாமிற்கு கேட்டில் பவுண்ட் வழியாக சாலை வருகிறது. கேட்டில் பவுண்டில் இருந்து அவாஹில் மற்றும் நல்லப்பன் தெரு செல்லும் சாலையோரத்தில் உள்ள செடி, கொடிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலம் போல் காணப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுபத்திரா குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், புல்வெளிகள், செடி, கொடிகள் எரிந்து நாசமானது.