புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து


புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
x

புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

நகராட்சி குப்பை கிடங்கு

புதுக்கோட்டையில் இருந்து திருக்கட்டளை செல்லும் ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் ஏற்கனவே மலை போல் குவிந்து கிடக்கின்றன. நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது தீப்பிடித்து எரிவது வழக்கம். இதனை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பது உண்டு. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை கிடங்கில் 2-வது கேட் அருகே உள்ள குப்பை மேட்டில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மள மளவென வேகமாக பரவியது. மேலும் தீ கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்தது. காற்று வீசியதால் தீயும் குப்பை மேட்டில் பரவியபடி இருந்தது.

புகை மூட்டம்

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு குப்பையில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நகராட்சி அதிகாரிகளும் விரைந்து வந்தனர். குடிநீர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. இந்த தீயானது கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை.

தீயை அணைக்கும் பணி இரவில் தொடர்ந்து நீடித்தது. இந்த விபத்தினால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமானது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் இரவில் கடும் அவதி அடைந்தனர்.


Next Story