வெல்டிங் பணியின்போது கன்டெய்னர் லாரியில் தீ விபத்து


வெல்டிங் பணியின்போது கன்டெய்னர் லாரியில் தீ விபத்து
x

விழுப்புரம் அருகே வெல்டிங் பணியின்போது கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான டயர்கள் எரிந்து சேதமடைந்தன.

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் தனியார் டயர் உற்பத்தி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கார்களுக்கு பயன்படுத்தக்கூடிய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை மகாராஷ்டிரா மாநிலம் ஹவுரங்கபாத்துக்கு புறப்பட்டது. லாரியை உத்தரபிரதேச மாநிலம் கொடி என்ற பகுதியை சேர்ந்த சுக்லா (வயது 55) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இந்த லாரி காலை 10.45 மணியளவில் விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் கூட்டுசாலை அருகில் வரும்போது லாரியின் பின்பக்க கதவு பகுதியில் இரும்பு பிளேட் சேதமடைந்ததால் அதனை வெல்டிங் வைப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் கடைக்கு சென்றார். அங்கு வெல்டிங் வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது வெல்டிங் தீப்பொறியானது எதிர்பாராதவிதமாக, கன்டெய்னர் லாரியில் இருந்த டயரில் பட்டு தீப்பிடித்துள்ளது. அந்த தீ, லாரியில் இருந்த மற்ற டயர்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

டயர்கள் எரிந்து சேதம்

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் சுக்லா, அந்த லாரியை அருகிலிருந்த வாட்டர் சர்வீஸ் கடைக்கு ஓட்டிச்சென்று அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு கன்டெய்னர் லாரியில் பற்றி எரிந்த தீயை முழுவதுமாக அணைத்து எரிந்த டயர்களை வெளியே எடுத்து அப்புறப்படுத்தினர்.. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான டயர்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மேலும் இந்த தீ விபத்தினால் மக்கள் நடமாட்டம் மிகுந்த கோலியனூர் கூட்டுசாலை பகுதியில் பெரும் புகை மண்டலமாக மாறியது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story