புதுப்பேட்டை அருகே தீ விபத்து:3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
புதுப்பேட்டை அருகே தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் ரவிச்சந்திரன் (வயது 25). நேற்று முன்தினம் நள்ளிரவில் இவருடைய கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்போது காற்று பலமாக வீசியதால், அருகில் உள்ள கோவிந்தராஜ் மனைவி மங்கலட்சுமி (65), கோவிந்தன் மனைவி முத்துலட்சுமி ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதன் சேதமதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.