ரெயில் பாதை அருகே தீ விபத்து
கிணத்துக்கடவில் ரெயில் பாதை அருகே தீ விபத்து ஏற்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் தரிசு நிலங்களில் உள்ள செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளன. இங்கு பீடி துண்டுகள், பற்ற வைத்த தீக்குச்சிகளை அணைக்காமல் வீசுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவில் இருந்து இம்மிடிப்பாளையம் செல்லும் வழியில் கோவை-பொள்ளாச்சி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடுமையான வெயில் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்கிடையில் மாலை மதுரையில் இருந்த வந்த கோவையில் ரெயில் அந்த இடத்தை கடந்து சென்றது. அப்போது கரும்புகையால் ரெயில் இருந்தவர்கள் அவதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல நெகமத்தை அடுத்த செங்குட்டைப்பாளையத்தில் இருந்து மூட்டாம்பாளையம் செல்லும் வழியில் சாலையோரத்தில் காய்ந்த நின்ற செடி, கொடிகளில் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற கிணத்துக்கடவு தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.