ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரிக்கு 1 ஆண்டு சிறை *
தீ தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகர்கோவில்:
தீ தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). இவர் மரக்கடை வைப்பதற்கு தீ தடையில்லா சான்றிதழ் வாங்க குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு சென்றார். அப்போது நிலைய அதிகாரியாக பணியாற்றி வந்த ரெத்தினமணி என்பவர் சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து ரெத்தினமணியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதனையடுத்து போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2-1-2014 அன்று ரூ.5 ஆயிரத்தை ரெத்தினமணியிடம், சதீஷ் கொடுத்தார். இதை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெத்தினமணியை கைது செய்தனர்.
சிறை தண்டனை
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி மாயகிருஷ்ணன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ரெத்தினமணிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். தற்போது ரெத்தினமணி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு 64 வயது ஆகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்.