எலச்சிபாளையத்துக்கு தேவை தீயணைப்பு நிலையம்


எலச்சிபாளையத்துக்கு தேவை தீயணைப்பு நிலையம்
x

தீ விபத்தின் போது உடனடி மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

காலதாமதம் ஏற்படுகிறது

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் 29 கிராம ஊராட்சிகளையும், மல்லசமுத்திரம் ஒன்றியம் 27 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது ஆகும். இவை முற்றிலும் கிராமங்களை மையப்படுத்திய ஒன்றியங்கள் ஆகும். ஆண், பெண் இருபாலர் என சுமார் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விசைத்தறி, ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் கட்டுமான பணிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. திருமணிமுத்தாறு உபரி நீர் வாய்க்கால் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டலோ அல்லது சாலை விபத்துகளில் வாகனங்கள் சிக்கி கொண்டாலோ திருச்செங்கோட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.

தீயணைப்பு நிலையம் வேண்டும்

தீயணைப்பு துறையின் மூலம் மக்களுக்கு உடனடி அவசர சேவைகள் என்ற அடிப்படையில் தீ விபத்து ஏற்படும்போது தீ பரவுவதை தடுத்து மக்களை காப்பாற்றி தீயை அணைப்பது பிரதான சேவை ஆகும். இதுதவிர மழைக்காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கிணற்றில் விழுந்து தவிக்கும் போது அதனை மீட்பது, வீட்டிற்குள் புகுந்த பாம்புகளை பிடிப்பது என பல்வேறு சேவைகள் மக்களுக்கு தீயணைப்புத் துறையின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எலச்சிபாளையம், அகரம், கொண்ணையார், கிளாப்பாளையம், இலுப்புலி, மாணிக்கம்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, புஞ்சைபுதுபாளையம். கூத்தம்பூண்டி, உஞ்சனை, 85.கவுண்டம்பாளையம், லத்துவாடி, கட்டிப்பாளையம், இளநகர், மாவுரெட்டிப்பட்டி, கோக்கலை, பெரியமணலி. அக்கலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீ விபத்து அல்லது மழைக்காலங்களில் பேரிடர் மீட்பு அவசர தேவைகளுக்கு தீயணைப்பு வீரர்களை பயன்படுத்த திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் அல்லது நாமக்கல்லில் இருந்து வரவழைக்க வேண்டி உள்ளது.

தூரம் அதிகமாக உள்ளதால் உரிய நேரத்தில் வர முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் இப்பகுதி மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய வாய்ப்பாக இருக்கும் என சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பேருதவியாக இருக்கும்

இது குறித்து சமூக ஆர்வலர் வெங்கடாசலம் கூறுகையில்:-

தீ விபத்து ஏற்படும் நேரத்தில் திருச்செங்கோட்டில் இருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் நேரம் ஆகிறது. அதற்குள் சேதம் அதிகமாக ஏற்பட்டு விடுகிறது. எனவே பெரியமணலி, வையப்பமலை, மாணிக்கம்பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மையமாக அமைந்துள்ள எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைந்தால் இப்பகுதியில் நடைபெறும் தீ விபத்து, சாலை விபத்து மீட்பு பணிக்கு பேருதவியாக இருக்கும்.

எனவே எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம் என்றார்.

உயிர்சேதத்தை தடுக்க முடியும்

ஆடிட்டர் வெங்கடேஸ்வரன் கூறுகையில்:-

எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பது மிக அவசியமாகும். ஏனெனில் எலச்சிபாளையத்தை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. கோடைகாலத்தில் அடிக்கடி வயல்வெளிகளில் தீ பிடித்து பயிர் சேதம் ஏற்படுகிறது. இதேபோல் மழைக்காலங்களில் விஷப்பூச்சிகள் வருவதும், கால்நடைகள் கிணற்றுக்குள் விழும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. மீட்பு பணிக்கு தீயணைப்புத்துறையினர் திருச்செங்கோட்டில் இருந்து வரும் நேரத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் காலதாமதம் ஆவதை தவிர்த்து, உயிர் சேதம் தடுக்க முடியும் என்றார்.


Next Story