பட்டாசு கழிவு தீ விபத்தில் சிக்கி படுகாயம்: 2 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பட்டாசு கழிவு தீ விபத்தில் சிக்கி படுகாயம்:  2 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பட்டாசு கழிவுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 2 சிறுவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


பட்டாசு கழிவுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 2 சிறுவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பட்டாசு கழிவுகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் அருண்குமார், பிரதீபன். இவர்கள் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்தனர். அந்த சமயத்தில் கருத்தூரணி கண்மாய் பகுதிக்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் கொட்டப்பட்டு இருந்த குப்பையில் அபாயகரமான பட்டாசு கழிவு பொருட்கள் கிடந்தன. அவை திடீரென தீப்பற்றியதில் சிறுவர்கள் இருவரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தனியார் பட்டாசு ஆலை எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தரப்பில், இழப்பீடு கோரியும், அபாயகரமான கழிவுகளை குப்பையில் கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிறுவர்களின் பெற்றோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

தனியார் ஆலை பொறுப்பேற்காது

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிதாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தனியார் பட்டாசு ஆலை தரப்பில் வக்கீல் சதீஷ் பாபு ஆஜராகி. சம்பவம் நடந்ததற்கு 2 ஆண்டுக்கு முன்னரே அந்தப் பகுதியில் இருந்த தனியார் பட்டாசு ஆலை செயல்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் பட்டாசு கழிவுகளை கொட்டியதற்கும், அங்குள்ள ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

அதற்கு மனுதாரர்கள் வக்கீல்கள் ஆஜராகி, குப்பையில் தீ பிடித்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சைக்காக ஏராளமான தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது அவசியம், என்றனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பட்டாசு நகரான சிவகாசியில் அதிகளவில் அபாயகரமான கழிவுப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. இந்த கழிவுகளின் ஆபத்தை சிறுவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சம்பவம் நடந்ததற்கு அருகில் இருந்த பட்டாசு ஆலையினர் இதற்கு பொறுப்பேற்க முடியாது. விபத்து என்பதால் மேல் நடவடிக்கை தேவையில்லை என போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை கீழ் கோர்ட்டு ஏற்று இருக்கக்கூடாது.

ரூ.10 லட்சம் இழப்பீடு

ஆபத்தான கழிவுகளை உள்ளாட்சி அமைப்பே முறையாக அகற்றி இருக்க வேண்டும். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் இருவரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து உள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவருக்கும் தலா ரூ.10 லட்சத்தை இழப்பீடாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் 8 வாரத்தில் வழங்க வேண்டும். இந்தத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி பெறும் வகையில் 5 ஆண்டுக்கு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story