மரத்தின் அடியில் தயாரித்த பட்டாசுகள் பறிமுதல்
மரத்தின் அடியில் தயாரித்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளின் 80 சதவீதம் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு உற்பத்தி அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் இயற்கை போதிய ஒத்துழைப்பு கொடுத்தது. கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு மழை பொழிவு விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் குறைவு. இதனால் பட்டாசு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பு இல்லை. இந்த நிலையில் தற்போது பலத்துறை அதிகாரிகள் விதிமீறல்களை தடுக்க திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாறைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆலை உரிமையாளர்கள் ஜான்சிராணி, பசுபதி, மேனேஜர் வைத்தியலிங்கம், போர்மென் குணசேகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அங்கு வைக்கப் பட்டிருந்த ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களால் விபத்து அபாயம் உள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் வேதனையுடன் கூறினார். விபத்துக்களை தடுக்க அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். அதன் பின்னரும் விதிகள் மீறப்பட்டு வருகிறது.