குடோனில் பதுக்கிய ரூ.45 லட்சம் பட்டாசு பறிமுதல்
சிவகாசி அருகே குடோனில் பதுக்கிய ரூ.45 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே குடோனில் பதுக்கிய ரூ.45 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரோந்து பணி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வெம்பக்கோட்டையில் இருந்து பேர்நாயக்கன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிவகாசியில் இருந்து மண்குண்டாம்பட்டி சாலையில் பெட்ரோல் பங்க் பின்புறம் மண்குண்டாம்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது55) என்பவருக்கு சொந்தமான குடோனை காக்கிவாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் (40) என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் அதிக அளவில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பட்டாசு பறிமுதல்
தொடர்ந்து அங்கு போலீசார் விசாரணை நடத்திய போது 1,150 பட்டாசு பண்டல்கள் அனுமதியின்றி அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு போலீசார் சீல் வைத்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கிரிதரன், முருகேசன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.