பணி நீக்கப்பட்ட வார்டர் தற்கொலை மிரட்டல்
பணி நீக்கப்பட்ட வார்டர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை வார்டராக பணியாற்றியவர் அழகுமுத்து (வயது 35). இவர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் மீது பணியில் அதிருப்தியடைந்த சிறை நிர்வாகம், புதுக்கோட்டை கிளைச் சிறைக்கு பணியிட மாற்றம் செய்தது. அங்கும் அவர் சரிவர பணியாற்றாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்ட வகையில் அவரை பணியிடை நீக்கம் செய்தனர். அதன் பின்னர் அவரை பணிநீக்கம் செய்தனர். இந்நிலையில், நேற்று மாலை, மத்திய சிறை முன் பகுதிக்கு வந்த அவர், தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக்கூறியும், சிறை நிர்வாகத்தை கண்டித்தும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ளப் போவதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதை கண்ட அங்கிருந்த வார்டர்கள் அவரது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடிங்கி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.