தீயணைப்பு படைவீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை


தீயணைப்பு படைவீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:45 PM GMT)

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு படைவீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே கனமழையின் போது பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கு தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறையினரை கொண்ட பேரிடர் மீட்புக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி பேரிடர் மீட்பு கருவிகள் அனைத்தும் அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன. இதனை வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதேபோல் பேரிடர் மேலாண்மை அலுவலகம், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, எண்ணெய் பொருட்கள் தீப்பிடித்து எரிவதை அணைப்பது ஆகியவற்றை கவச உடை அணிந்த தீயணைப்பு படைவீரர்கள் செய்து காண்பித்தனர். மேலும் உயரமான கட்டிடத்தின் மேல் உதவிக்காக தவிப்பவரை ஏணி மூலம் மீட்பது, சாலையில் விழுந்த மரங்களை அகற்றுவது ஆகியவற்றை தீயணைப்பு படைவீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதனை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


Next Story