மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்


மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
x

மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.

அரியலூர்

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் அவ்வவ்போது லேசாக மழை பெய்தது. ஆனால் கன மழை பெய்யவில்லை. இரவு நேரத்தில் மழை தூறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மாண்டஸ் புயலாக மாறியதால் அதி கன மழை பெய்யக்கூடும் என்பதால் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிக்காக 100 தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இது குறித்து ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா கூறுகையில், மாண்டஸ் புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் இயக்குனர் உத்தரவின்படியும், மத்திய மண்டல துணை இயக்குனர் வழிக்காட்டுதலின்படியும் போர்க்கால அடிப்படையில் அனைத்து தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருக்கிறார்கள். புயல் மழையால் பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் 112, 101 என்ற கட்டணமில்லா அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக வந்து உதவுவார்கள் என்றார்.


Next Story