ஸ்டவ் பற்ற வைக்கும்போது தீயில் கருகி தீயணைப்பு வீரர் மனைவி பலி


ஸ்டவ் பற்ற வைக்கும்போது தீயில் கருகி தீயணைப்பு வீரர் மனைவி பலி
x

ஆரணியில் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது குபீரென பற்றிய தீயில் கருகி தீயணைப்பு படைவீரரின் மனைவி இறந்தார். காப்பாற்ற முயன்ற வீரரும் பலத்த தீக்காயம் அடைந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது குபீரென பற்றிய தீயில் கருகி தீயணைப்பு படைவீரரின் மனைவி இறந்தார். காப்பாற்ற முயன்ற வீரரும் பலத்த தீக்காயம் அடைந்தார்.

தீயணைப்பு வீரர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதி கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் ஆரணி தீயணைப்பு நிலையத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 48).

நேற்று மாலை ஜெயலட்சுமி மண்எண்ணெய் பம்பு ஸ்டவ்வில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது குபீரென தீ வெளியேறி ஸ்டவ் வெடித்த நிலையில் ஜெயலட்சுமி மீது தீ பற்றியது. இதனால் அவர் அலறினார். அருகில் இருந்த கணவர் சரவணன், மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் பலத்த தீக்காயம் அடைந்தார்.

தகவல் அறிந்த ஆரணி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயலட்சுமி கருகிய நிலையில் கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் .

சிகிச்சை

இதனை தொடர்ந்து பலத்த தீக்காயங்களுடன் துடித்த சரவணனை தீயணைப்பு படையினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ஜெயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த ஜெயலட்சுமிக்கு விக்ரம், ஜெகன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.


Next Story