கோவிலில் மது அருந்தியவர்களை வெளியேற்றியவர் மீது துப்பாக்கிச்சூடு


கோவிலில் மது அருந்தியவர்களை வெளியேற்றியவர் மீது துப்பாக்கிச்சூடு
x

கோவிலில் மது அருந்தியவர்களை தாக்கியவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. குறி தவறியதால் அவர் உயிர் தப்பினார்.

திருவண்ணாமலை

போளூர்

கோவிலில் மது அருந்தியவர்களை தாக்கியவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. குறி தவறியதால் அவர் உயிர் தப்பினார்.

நண்பர்களுடன் மது அருந்தினார்

போளூர் அருகே உள்ள பெரியகரம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பூங்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் லட்சுமணன் (வயது 22).

கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் அங்குள்ள கோவில் வளாகத்தில் உள்ள மேடையில் இவரும் இவரது நண்பர் சுப்பிரமணியும் சக நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். கோவில் இடத்தில் மது அருந்துவதை கேள்விப்பட்ட ஊர்பொதுமக்கள் சிலர் கண்டித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அவர்களை திட்டி அனுப்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது நண்பர் பாபு ஆகியோர் நேரில் சென்று லட்சுமணனை அடித்து வெளியே போங்கடா என்று திட்டியுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டார்

அப்போது போதையில் இருந்த லட்சுமணன் ஆத்திரத்தில் வேகமாக தனது வீட்டிற்கு சென்றார். அங்கு மறைத்து வைத்திருந்த கள்ள துப்பாக்கியை எடுத்து வந்த அவர் சுதாகரை நோக்கி சுட்டு உள்ளார். அப்போது குண்டு குறி தவறி கோவில் சுவர் மீது பட்டுத் தெறித்து உள்ளது.

அதிர்ச்சிஅடைந்த சுதாகர் துப்பாக்கியை அவரிடமிருந்து பறிப்பதற்காக பிடித்து இழுத்த போது அதன் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதனால் பயந்து போன சுதாகர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து சுதாகர் நேற்று காலை போளூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்- இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் பூங்கொல்லைமேடு கிராமத்திற்கு சென்று லட்சுமணனை கைது செய்து அவர் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணை செய்ததில் சில வருடங்களுக்கு முன்பு மூலக்காடு பகுதியில் துப்பாக்கி விலைக்கு வாங்கியதாகவும் அதனை வைத்து எப்போதாவது ஒருமுறை வனவிலங்குகளை வேட்டையாட செல்வதாகவும் தெரியவந்தது.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story