போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி
அரக்கோணத்தில் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி நடைபெற்றது.
அரக்கோணம் சுவால் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமை தாங்கினார். அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது எந்தப் பகுதியில் விபத்துக்கள் நேர்ந்தாலும் முதலில் அழைப்பது போலீசாரைத்தான். எனவே போலீசார் முறையான முதலுதவி சிகிச்சையை தெரிந்து வைத்துக் கொண்டால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். அதற்காகத்தான் இப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் முறை, அவர்களுக்கு அளிக்க வேண்டிய உடனடி முதலுதவி சிகிச்சை ஆகியவற்றை பயிற்சி பெற்ற போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் எளிதில் குணம் அடைய வாய்ப்புகள் ஏதுவாக அமையும் என்றார்.
முகாமில் விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு முதலுதவி சிகிச்சைகள் அளிப்பது எப்படி என்பது குறித்தும் மருத்துவ குழுவினர் செயல் முறை மூலம் பயிற்சி அளித்தனர். இதில் அரக்கோணம் டவுன் மற்றும் போக்குவரத்து, தாலுகா, தக்கோலம் போலீசார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.