சென்னையில் முதன்முறையாக மலர் கண்காட்சி


சென்னையில் முதன்முறையாக மலர் கண்காட்சி
x

ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முதன்முறையாக நடைபெறும் மலர் கண்காட்சியை, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

ஊட்டி, கொடைக்கானலில் சமீபத்தில் மலர் கண்காட்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து சென்னையில் தோட்டக்கலைத் துறை சார்பில் முதன் முறையாக, ஊட்டி, கொடைக்கானலை போன்று மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது.

இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன் எம்.பி., தமிழக சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அலங்கரிக்கப்பட்டிருக்கும் பூக்கள்

கண்காட்சியை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்த மலர் அலங்கார சிற்பங்களை பார்வையிட்டனர். கண்காட்சியில் ஊட்டி, கொடைக்கானல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 4 லட்சம் மலர்கள் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

கண்காட்சியில் பொது மக்களை கவரும் விதமாக நுழைவு பகுதியில் ரோஜாப்பூக்களை கொண்டு 'ஷோபா இருக்கை' போன்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அதுதவிர, 'டெடி பியர்', மான், மீன், குதிரை, அணைக்கட்டு, பிரமாண்ட பறவை வடிவிலும், அதியமான், அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுப்பது போன்ற உருவத்திலும், அரசு பஸ் போன்ற அலங்கார சிற்பங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. அவை பார்வையிடும் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

'செல்பி ஸ்பாட்'

மேலும், ஒவ்வொரு பூக்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. அதில் அந்த பூக்களின் தாவரவியல் பெயர், சாகுபடி செய்யும் இடங்கள், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது? என்பது போன்ற தகவல்களும், சங்க இலக்கியங்களில் மலர்களின் பருவ நிலை, கபிலரின் குறிஞ்சிப்பாட்டு மலர்கள், சாலைஓர பூக்கும் மலர்கள், திருக்குறளில் இடம்பெறும் மலர்கள் எவை? என்பது போன்ற பல்வேறு தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல், மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள் சில இடங்களில் செல்பி எடுத்து மகிழ்வதற்கு ஏற்றவாறு 'செல்பி ஸ்பாட்' பகுதியும் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மலர்களை போன்று, பழம் மற்றும் காய்கறிகளை கொண்டும் அலங்கரித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் அவரைக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளால் திருவள்ளுவர் சிலையும், பூசணிக்காய், கத்தரிக்காய், பாகற்காய், கோவக்காய் உள்பட சில காய்கறியை கொண்டு பட்டாம்பூச்சியும் வடிவமைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நுழைவு கட்டணம் ரூ.50

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொது மக்கள் பார்வையிடலாம். இதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ.50-ம், மாணவர்களுக்கு ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், 'ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் நடத்தப்படும் இதுபோன்ற விழாக்கள், முதன்முறையாக சென்னையில் கலைஞரின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படுகிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். மக்களை கவரும் மலர் கண்காட்சியாக இது இருக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.


Next Story