முதல் போக நெல் நடவு பணி: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
முதல் போக நெல் நடவு பணிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் போக பாசனத்துக்காக கடந்த மாதம் 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அப்போது பாசனத்திற்கு 200 கன அடி, தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கன அடி என வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நாற்றங்கால் அமைத்தும், உழவு பணிகள் செய்தும், வயல்களை தயார்படுத்தி வந்தனர். இதற்கிடையே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி முதல் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடுதல் தண்ணீர் திறப்பு
இதையடுத்து தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இன்று காலை முதல் மேலும் கூடுதலாக வினாடிக்கு 678 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1.678 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 127.70 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1457 கனஅடியாகவும் உள்ளது.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன்படி 4 ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 151 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.