கோவில் விழாவில் முதல் மரியாதை கூடாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் விழாவில் முதல் மரியாதை கூடாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவில் விழாவில் முதல் மரியாதை கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் தை மாத திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனிநபர்கள் முதல் மரியாதை கோரி தகராறு செய்து வருகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே சிங்கம்புணரி மல்லாக்கோட்டை கிராமத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது யாருக்கும் முதல் முதல் மரியாதை கூடாது என்றும், இது தொடர்பாக பிரச்சினையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இது போன்ற வழக்குகள் இந்த கோர்ட்டுக்கு புதிது அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்த போது பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த கோர்ட்டு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபட கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவுகள் இந்த வழக்குக்கும் பொருந்தும் என தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story